ஐகூ இதழ்: கவிஞர் கன்னிக்கோவில் இராசா அவர்கள் நாள்தோறும் சிந்தியல்/குறும்பா எனப்படும் ஐகூ வகை பாக்கள் குறுஞ்சேதி வழி 'கன்னிக்கோவில் இராசா குறுஞ்சேதி ஐகூ இதழ்' மூலம் இலக்கியப்பணியாற்றுகிறார். தாங்கள் இந்த இதழ் பெற ஆவலுற்றால் தொடர்புக்கொள்ளவும். (9841236965)

பாரி படுகளம் - நாடகம்

புதுவை பலகலைக்கழகம் நிகழ்கலை துறை வழங்கும் பிரளயனின் பாரி படுகளம் நாடகம் சென்னையில் நடைபெறுகிறது.

கன்னிக்கோவில் இராஜா எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா


இடமிருந்து வசீகரன், விஜயன், எஸ்.வி. இராஜசேகர், கார்முகிலோன், சந்திரசேகர், ஆசுரா, கன்னிக்கோவில் இராஜா, மற்றும் சுடர் முருகையா

08.03.09 அன்று கன்னிமாரா நூலக அரங்கில் கன்னிக்கோவில் இராஜா எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவை மின்னல் கலைக்கூடம் பதிப்பகம் நடத்தியது.
விழாவில் சுடர் முருகையா தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 36 கவிஞர்கள் பங்குபெற்ற 'ராஜாங்கம்' ஹைக்கூ தொகுப்பு நூலை கவிஞர் கார்முகிலோன் வெளியிட மாம்பலம் சந்திரசேகர் பெற்றுக் கொண்டார். 'சொற்களில் சுழலும் கவிதை' நூலை எஸ்.வி இராஜசேகர் வெளியிட கவிஞர் எஸ். விஜயன் பெற்றுக் கொண்டார். 'கன்னிக்கோவில் இராஜாவின் எஸ்.எம்.எஸ். மலரை' முனைவர் ஆசுரா அறிமுகப்படுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்.
வசீகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மயிலாடுதுறை இளையபாரதி தொகுத்து வழங்கினார். கன்னிக்கோவில் இராஜா ஏற்புரையும், இளையகவி சலாமத் அலி நன்றியுரையும் நிகழ்த்தினர்.
விழாவில் புதுவை தமிழ்நெஞ்சன், அமுதபாரதி, சேலம் செல்வராஜா, கொள்ளிடம் காமராஜ், அனலேந்தி மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் கலந்த கொண்டு சிறப்பிக்க, விழா இனிதே நிறைவேறியது.

படைப்புகள் இதழ் 5


கவிதைகள் இதழ் 4,3,2,1

மனச்சுருக்கம்
-கன்னிக்கோவில் இராஜா,சென்னை.
எண்ணிக்கை கூடிப்போன
பெண்பார்க்கும் நிகழ்வில்
அம்மா ராசியெனக் கூறிய
மயில் கழுத்துப் பட்டுப்புடைவையில்
அமர்ந்திருக்கிறேன் பொம்மையென!
சுற்றத்தாரின் நகைச்சுவை
பேச்சுக்களுக்கிடையில்
ஓரிரு முறை
மறைமுகமாகப் பார்க்கிறார்
மாப்பிள்ளையாய் வந்திருப்பவர்!
இரு வீட்டாரின் பெருமைகளை
வரிசைப் படுத்துகிறார் தரகர் !
வந்த உறவுகளின்
வாய் மொழிக்கிடையில்
அல்லாடுகிறது
என் வாழ்வின் எதிர்காலம்!
எல்லாம் பிடித்துப்போன
கணத்தின் பின் பாதியில்
ஆரம்பமாகிறது வியாபாரத்தின் உச்சக்கட்டம்!
பண்டமாற்றுமுறை
முறிந்துப்போன அடையாளமாய்
கைமாறுகிறது
அடுத்த மாப்பிள்ளையின் ப்புகைப்படம்!
மறுபடியும்
தயாராக வேண்டும்
சுருக்கம் நீங்க
புடைவையை சலவை செய்து!
என்
மனச்சுருக்கம் அறியாத
மற்றவர்களிடமிருந்து!

-
குறும்பாக்கள்
-பொன்.குமார்,சேலம்.
கவலையில் மீனவன்
களிப்பில் மீன்கள்
அடைமழை.
-
மண்மாறினாலும்
மாறாமல் உள்ளது
விடுதலை வேட்கை.
-
கைத்தட்டலில்
வயிறு நிறையவில்லை
கவலையில் கூத்தாடி.
-
எல்லைப்பிரச்சனை
இயற்கையின் தீர்ப்பு
பூகம்பம்.
-

அடடே..!-
மு.பிரேம்குமார்,அரூர்.


அள்ளித்தராமல்
கிள்ளிதந்தாலும்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது
அம்மாவின் முத்தம்.
--
திக்கன் கவிதைகள்
தொட்டி மீனுக்கு ஆறுதல்
அருகில்
தொட்டிச்செடி.
--
பதருகிறது மனசு
கரையொதுங்கும்
ஆளில்லா படகு.
--
ஏழைச் சிறுவனின்
கோவணத்தை பறித்தது
டிஜிட்டல் பேனர்

மொழி காப்போம் - வெ.யுவராஜ்
உருவளர்க்க பொருளீட்ட
பிறநாடு பறந்திட்டாலும்
சிறப்புற்ற பிறந்தநாட்டை
எம் தமிழர்கள்
உரமேற்றி உயர்த்த மறப்பதேனோ..?

மணம் மாறி குணம் மாறி
தமிழர்கள் பூமியிலே
தரங்கெட்டு திரிதலால்
தமிழும் தமிழினமும்
நிமிரும் திறனற்று
குனிந்தே குன்ற்விடுமோ..?

பிறநாட்டு நல்லறிஞர்
எம்மொழியால் வளங்கண்டார்..?
சிற்ப்புற்ற தாய்மொழியால்
சிகரம் ஏறி உயர்நின்றார்
செம்மொழியாம் நம்மொழி
எந்நிலையில் தாழ்ந்தது கண்டீர்.
கருத்தொன்றி ஒருமைக்கொண்டால்
அந்நியர்கள் ஆள்வாரோ.?

இயற்றாத தமிழரால்
இயலாமல் கிடக்கிறது தமிழ்மொழி
இயற்றுவோம் தமிழால் என்றால்
இசைந்து வர தயங்குவீரோ..?

தயக்கங்கொண்ட தமிழரால்
தரணியாள எங்ஙனம் முடியும்?

தரணியாள தேவையில்லை
தமிழினமும்,தமிழ்மொழியும் காலங்காக்க
வழி நிற்போம்!

ஊரெல்லாம் - சுதா கண்ணன்.,செய்யாறு.

உருகுலைந்து கிடக்கிறது
ஊரெல்லாம்...
நாற்றத்தில் மிதக்கிறது
நகரங்கள்..
வன்முறைமயம்
மாவட்டங்கள் தோறும்
நாவறண்ட நிலையில்
மாநிலம்..
விவாதம் என்ன வேண்டிகிடக்கு...?
உலகமயமாக்கல் குறித்து.!!

பாதைகள்-ச.கோபிநாத்,சேலம்.
எனக்கான பாதையை
வகுத்துகொள்ள
மிகுந்த விருப்பம் எனக்கு..!
இருப்பினும் சற்றே
பயணிக்க நேர்கிறது
பிறர் வகுத்த பாதையில்..!

இலட்சியத்தை
நிறைவேற்றிக்கொள்ள
நகைத்தும்,அழுதுமாய்
வெளிப்படுத்தநேர்கிறது
எனதான உணர்வுகளை...!

விசாலமாய் இருக்கும்
உலகில்
சிலரின் சாதனைகளுக்காக
வழிவகுக்கும் பாதையில்
எனக்கான பயணத்தை
எதிர்நோக்கி காத்திருக்கிறது
எனதான
உள்ளமும் உணர்வுகளும்..!

முற்றுப்புள்ளியாய்..-வந்தை பா.சீனுவாசன்.

ஒவ்வொரு மனிதனும்
போராடிப் போராடி
முன்னேறும் வாழ்க்கையில்
போராட்டங்கள் தான்
முடிவதில்லை.

முற்றுப்புள்ளியில்லா
போராட்டத்தின் முடிவாய்
மனிதனின் இறப்பில்
நெற்றியின் நடுவில்
வந்து விழுகிறது
முற்றுப்புள்ளியாய்
நாணயம்.

எங்கள் கிராமம்-இரா.பகீரதன்,சாத்தனூர்,வந்தவாசி.

எங்கள் கிராமத்தை
சுலபமாக வர்ணித்து விடலாம்.
ஒரு நிழற்குடை
நான்கு ஆலமரம்
கொஞ்சம் வேப்பை,புங்கைமரம்
தடுப்பாய் ஒரு குளம்
வீரமுனியப்ப சாமி கோயில்
இருப்பத்தேழு வீடுகள்
மொத்தமாய் நூற்றாரு
ஓட்டுகள்.....
எத்தனை ஒப்பிட்டாலும் என்ன.?

நகரத்தால் ஈடுசெய்ய
முடியவேயில்லை
எங்கள் மக்களின்
மனதில் கசியும் ஈரத்தை.....!

தெரியவே இல்லை...-ப.முபினா,கூழமந்தல்,வந்தவாசி.

நிமிடம்
நாழிகை
மணி
ஜாமம்
அயனம்
நாள்
வாரம்
பட்சம்
மாதம்
ருது
ஆண்டு
எல்லாம்
கடந்து கொண்டுதான்
இருக்கின்றன...
வெற்றியின் விலாசமோ
தெரியவேயில்லை
சோம்பேறிகளுக்கு.......

ஆளுக்கொரு சமாதி-த.அசோக் குமார்,திருவண்ணாமலை.

வாய்க்காயோரம்
வயதைத்திருடும்
காக்கட்டாம் பூக்கள்..
தெளிந்தோடும்
சுனைநீரில்
தாகம் தீர்க்கும்
தவளையுடன்,சிறுமீன்கள்.
குயிலின் புன்னைமரம்
ஊஞ்சலுக்கான மாமரம்
அணில் திரிந்த பனைமரம்
பிறவியை முழுமைப்படுத்தும்
தென்னைமரம்
காட்சிக்கு கானலாயின
விளைநிலங்கள் வீட்டுமனைகளாய்
பணப்பேய்களின்
புதிய கல்லறைகளிது
வாங்கிக்கொள்ளுங்கள்
ஆளுக்கொரு சமாதி.

சிக்கனம்-சாமி.சீனுவாசன்,நடுக்குப்பம்,வந்தவாசி.

சிக்கனம் சிக்கனம் சிக்கனம்
இக்கணம் தேவை சிக்கனம்
சிக்கனம் இல்லா வாழ்வு
திக்கு தெரியா காடு. (சிக்கனம்)

ஈட்டும் பொருளோ கொஞ்சம்
ஏழைக்கு வேண்டாம் பஞ்சம்
தேவைக்கு மட்டும் செலவு
அதுவே சிறந்த வரவு. (சிக்கனம்)

காந்தியின் ஆடை சிக்கனம்
கிடைத்தது நமக்குச் சுதந்திரம்
சிற்பி செதுக்கிய சிக்கனம்
சிரித்ததே அற்புத சிற்பமும். (சிக்கனம்)

சிக்கனத்தால் நேர்ந்திடும் பொருளை
சேமிப்போமே வங்கியில் என்றும்
சேமிப்பதால் நமக்கும் வரவு
சிறந்த திட்டம் நாட்டுக்கு உயர்வு. (சிக்கனம்)

இளவேனில் கடந்த பின்பும்..
-பால் செல்வநாதன்,வந்தவாசி.


உறிஞ்சிய வியர்வையை
பியிந்தபின் உலர்கின்றன
சட்டைகள்..

திருடிய தேனை
அடுத்தப்பூவில் சேர்க்கின்றன
தட்டான்கள்..

உயருகின்ற சொத்து மதிப்பில்
கொப்பளிக்கின்றன
இரத்ததுளிகள்...

முகிழ்கின்ற காய்களுக்குள்
வசதியாய் வசிக்கின்றன
கருவண்டுகள்..

மூன்று ஷிப்டுகளுக்குள்
முடிந்துவிடுகின்றன
உழைப்பாளிகளின் வாழ்க்கை..

இளவேனில் கடந்த பின்பும்
துளிர்களுக்காய் காத்திருக்கிறேன்
நான்.....!

திரைகடலோடியும்....?
-புரட்சியாளர் பித்தன்,மும்முனி,வந்தவாசி.


அதோ ஓடுகிறான்
எனதருமை தமிழன்
கடல் கடந்து ஓடியதும்
தாய்மண்னை மறந்தவன்
கல்லடி பட்டவுடன்
அம்மா என்று கத்துகிறான்
உன்னை ஈன்றவள் இங்கிருக்க
மாற்றான் மண்ணை சுமக்கிறான்
வளம்மிக்க நம் பூமியை விட்டுவிட்டு
வருவாய் தேடி ஓடிவிட
வேற்று நாட்டவன் தூக்கியெறிகிறான்
ஒட்டுமொத்த தமிழீழத்தை
மீண்டுவர ஒரு சந்தர்ப்பம்-நம்
தாய்மண்ணை மறவாமல் அணைக்க....

....போல் -கா.அமீர்ஜான்,திருநின்றவூர்.


அவர்போல் இல்லை நான்
என்பதில்
அவரிடம் இல்லாத சினம் இருக்கிறது
கட்டுபாடற்று
என்னிடம்

தாகம் தணிக்கும் நதிபோல் அவர்
என்பதில்
கடல் போல் இருக்கிறேன்
சுத்திகரிக்கப்படாமல்
நான்

ஆலமரம் போல்
நிழல் தருவதில் இல்லாமல்
நானில் இருக்கிற நான்
ஈக்களையும்
உட்கார அனுமதிப்பதில்லை
என்கைகளில்

புகலிடம் தரும்
அவர்போல் இருக்க முயலாமல்
இருக்கிறேன்
வீடு பூட்டியதுபோல்
மனம்

அவர்போல்
இல்லையாகிலும் என்போல்
இல்லாமலிருக்க
நினைக்க வேண்டுயவனாக இருக்கிறேன்
மற்றவர்களும் நினைக்க எண்ணும்
நான்....

நவீன கலாசாரம் -குமாரி பிரகாஷ்,திருவண்ணாமலை.

திறந்த மார்போடு
திரைப்பட சுவரொட்டி
வெறித்துப்பார்க்கும்
விடலைகள்
காமக்கண்களோடு
கடந்து செல்லும்
பெண்ணையும்...
சமுதாயக்கழிவுகளை
கலைநயத்தோடு
சிகப்பு சாயம்பூசி
சில்லரைப்பார்க்கும்
வியாபாரிகள்...
கற்றுத்தந்த
காவியங்கள்
கால வெள்ளத்தால்
அடித்துச் செல்லப்பட்டாலும்
கரையொதுங்கும்
போதெல்லாம்
அப்புறப்படுத்துகிறது
கழிவுகளையும் சேர்த்து.....

திக்கன் கவிதைகள்

பூங்கா மலர்கள்
வருந்துகின்றன
'பூக்களைப்பறிக்காதீர்கள்'
என்ற வாசகத்திற்காக
அருகில் அவள்.

என்னைவிட
என் பேனாவிற்குத்தான்
உன் நினைவுகள்
அதிகம்.
எப்போதும்
புலம்பிக்கொண்டிருக்கிறது
தாளிடம்.

புத்தம்புது பூமியாய்...
-ம.பாலா, ஆரணி.


புத்தம்புது உலகில்,
புத்தம்புது நாளில்
புத்தம்புது மனிதனாய் பிறக்க
புத்தகமொரு
புதிய பூமியாய் பூக்கட்டும்.

ஐகூ
-சி.பச்சைமுத்து,பழையனூர்,திருவண்ணமலை.


கண் நெற்றிக்கு எட்டாமல்
சாணிக்கு மட்டும் பொட்டிட எட்டும்
அவளின் கை.

நாகரிக பெண்கள்
-கு.ஆனந்தராசன்.பாதிரி,வந்தவாசி.


பெண்களின் மீது
பலசுமைகள் கூடாது என்று
போராடினதின் விளைவோ..?
அணியும் ஆடைகளையே
சுமையாக நினைக்கும்
இன்றைய நாகரிக பெண்கள்.

வலிதாங்கும் பெண்
-கோ.பூவரசி,மங்கநல்லூர்,வந்தவாசி.


வசதி படைத்தவர்
வயிற்றில் அடிக்க
பணம் படைத்தவர்
நெஞ்சில் மிதிக்க
பலம் படைத்தவர்
முதுகில் அழுத்த
குடும்ப பாரத்தை முழுவதும் சுமக்க
அனைத்து நிலையிலும்
வலித்தாங்கும் பெண்.

நாங்கள்..!
-ர.யோகவள்ளி,அகிலாண்டேசுவரி கல்லூரி,வந்தவாசி.

அழுவதற்கல்ல இனி
ஆக்குவதற்காக பிறந்தோம்.

சோறு படைக்க மட்டுமல்ல
சாதனைகளும் படைப்போம்.

சோக சுமைதாங்கிகளல்ல
சாகச சாவித்திரிகள்.

இனி நாம் அடிமையல்ல
அகிலத்தின் அடையாளம்.